இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறிவருகின்றன. பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால், அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. இந்நிலையில் டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்டியிருப்பதாக கூறி உள்ளது.
மேலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் அளவிற்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு இருப்பதால், 60 நோயாளிகளின் உயிர் ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தது. அதன்பின்னர் 2 மணி நேரத்தில் அங்கு ஆக்சிஜன் டேங்கர் வந்து சேர்ந்தது.கடந்த 24 மணி நேரத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த 25 நோயாளிகள் இறந்திருப்பதாக மருத்துவமனை தலைவர் கூறினார். ஆனால், அவர்களின் மரணத்திற்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் தொடர்பு இல்லை என்றார். டெல்லியில் நேற்று ஒரே நாளில் 26,169 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 306 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.