புலம்பெயர் அமைப்புக்கள் கண்டனம் பதிலளிப்பாரா சீமான் ?

புலம்பெயர் அமைப்புக்கள் கண்டனம் பதிலளிப்பாரா சீமான் ?

உலகெங்கும் பரவிவாழும் தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

திரு சீமான் அவர்கள் பொறுப்புக் கூறவேண்டியது காலத்தின் கட்டாயம் !

இரண்டு வாரங்களுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் தமிழீழ புலனாய்வுத்துறையின் பொறுப்பாளருமாகிய மதிப்புக்குரிய பொட்டு அம்மான் அவர்களை, கேவலமான வார்த்தைகளால் திட்டியும் தமிழீழ மக்களின் எந்தவொரு உதவியும் தமிழக மண்ணின் அரசியலிற்கு தேவையில்லையென்றும், பேசப்பட்ட ஒலிப்பதிவுக் குரல் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.அந்தக்குரல் பதிவு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் பேசியது போல அமைந்திருந்தது. அதனால், ஈழத்திலும் புலத்திலும் மற்றும் தமிழகத்திலும் அனைத்துத் தரப்பு தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்ததுடன், திரு சீமான் அவர்களின் நன்பகத்தன்மை குறித்து சந்தேகக் கேள்விகளும் எழுப்பப்பட்டிருந்தன.

குறிப்பாக, புலத்திலும் தமிழகத்திலும் தமிழ் உணர்வாளர்களிடையே பலத்த சந்தேகங்களை எழுப்பிய இவ்விடையம் முற்றுப் பெறாமல் தொடர்ந்து இரண்டு வார காலமாக பேசு பொருளாகவே உள்ளது. ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தான் இவ்வாறு பேசவில்லையென்று, திரு சீமான் அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார். ஈழத்தை உண்மையில் நேசித்த ஈழத்தமிழர்கள், திரு சீமான் அவர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு கேட்ட போதும், தான் அவ்வாறு பேசவில்லையென்று மறுப்பினையே தெரிவித்திருந்தார். திரு சீமான் அவர்கள் பொய் சொல்ல வாய்ப்பில்லையென்று, அவர் கூறியதை நம்பி ஆறுதலடைந்திருந்தனர்.

சீமான் அவர்கள் இவ்வாறு மறுப்புத் தெருவித்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதியென்றும் மற்றும் திரு சீமான் அவர்களைப் போன்றே ஒலிப்பதிவை வெளியிட்டு, நாம் தமிழர் கட்சியின் அரசியலை ஒழிப்பதற்கான திராவிடர்களின் சதி முயற்சியென்றும், சமூகவலைத்தளங்களில் கடுமையான கருத்து மோதல்கள் இடம்பெற்றன. சீமான் அவர்களை ஆதரிக்கின்ற சமூக ஊடகங்களும் இதனையே வலியுறுத்தின.

சீமான் அவர்கள், பொட்டம்மான் குறித்து தவறாக பேசியதாக போலியான குரல் பதிவு செய்து, எதிர்ப்பிரச்சாரம் செய்து தமிழக வாக்காளர்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாமென்று எதிர்கட்சிகள் திட்டமிட்டு செயற்படுகின்றனவென்ற வாதத்தில், புலம்பெயர் தமிழர்களுக்கும் தமிழர்களின் கட்டமைப்பு சார் அமைப்புகளுக்கும் தங்களின் நலனுக்காக தமிழகத்திலுள்ள கட்சிகளுடனான முரணை அதிகப்படுத்த நாம் தமிழர் கட்சி முயல்கின்றது என்ற வலுவான சந்தேகம் எழுந்தது. இதனை உணர்ந்து இவ்விடையத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த போது, திரு சீமான் அவர்கள் அவ்வாறு பேசிய ஒலிப்பதிவு உண்மையென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய குரல்பதிவு, திரு சீமான் அவர்களுடன் தொடர்பில் இருந்த புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழர்கள் இருவருக்கு Whatsapp மூலமாக குரல் பதிவாக சீமான் அனுப்பிய செய்தியென்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இச் செய்தி இவர் மூலம் முன்னாள் போராளியொருவருக்கு அனுப்பும்படி சீமான் கூறியதாகவும், மேலும் அறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வெளியாகியுள்ள சர்சைக்குரிய ஒலிப்பதிவு குரல் குறித்து, திரு சீமான் அவர்கள் தனது தெளிவானதும் உண்மையானதுமான விளக்கத்தினை, பொதுவெளியில் வழங்கவேண்டும். ஏன் எனில், இவ்விடையம் தமிழீழ உணர்வாளர்களிடமே வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றது.

குரல் பதிவு செய்தியினை whatsapp மூலமாக பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகின்ற முன்னாள் போராளி மற்றும் இவ்விடையங்களை உண்மையென அறிந்தும் மெளனம் காத்து இது தொடர்பான கருத்துக்களை வெளியிடாமல் அமைதிகாத்து நிற்கின்ற செயலானது, ஈழப்போராட்டத்திற்கும் மாவீரர்களுக்கும் மற்றும் தலைமைக்கும் செய்கின்ற மாபெரும் துரோகமாகவே கருதப்படுகின்றது.

ஈழப் போராட்டத்தினை நேரடியாகவும் மறைமுகவாகவும் பாதிக்கக்கூடிய கருத்துக்களை, திரு சீமான் அவர்கள் வெளிப்படுத்திய போதும், நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் திரு தடா சந்திரசேகர் அவர்கள், ஈழத்தமிழர்களை இழிவாக பேசிய போதும், தமிழீழ விடுதலை போராட்டத்தினை 70களில் இருந்து 35 வருடகாலமாக தமிழகத்தில் தாங்கிப்பிடித்து மக்களிடம் ஈழப் போராட்டத்தின் நியாத்தன்மையினை எடுத்துரைத்து மாபெரும் எழுச்சியினை அக்காலப் பகுதியில் ஏற்படுத்தி, தொடர்ந்தும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் பயணிக்கும் ஈழ உணர்வாளர்களை, இனரீதியாக மொழிரீதியாக வகைப்படுத்தி துரோகிகளாக்கி ஒதுக்கிய போதும், சிறு கண்டனத்தை கூட வெளிப்படுத்தாமல் கடந்து சென்றதன் விளைவே, இன்று திரு சீமான் அவர்கள் எதனையும் பேசி விட்டு கடந்து போகலாமென்ற நம்பிக்கையை அவருக்கு கொடுத்துள்ளது.

அதே வேளை மதிப்பிற்குரிய திரு. பொட்டம்மான் அவர்கள் குறித்து பேசிய சர்ச்சைக்கு திறந்த மனதுடன் கருத்தினை வெளிப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

புலத்தில் இருந்து கண்டனத்தை தெரிவிக்கும் ஈழத்தமிழ் அமைப்புக்கள்:
*தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC).
*அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை(ICET).
*நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE).
*பிரித்தானிய தமிழர் பேரவை (BTF).
*கனடியத் தமிழர் பேரவை (CTC).
*உலகத் தமிழர் வரலாற்று மையம்.
*அவுஸ்ரேலியா தமிழர் காங்கிரஸ் (ATC)

  • தமிழர் இயக்கம் (TM).
  • தமிழ் இளையோர் அமைப்பு (TYO).

நன்றி.
” தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் “

குறித்த ஊடக அறிக்கை மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்றது இதற்கும் நெருடல்செய்திகள் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *