இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ்கிக்கப்பல், கே.ஆர்.ஐ. நங்கலா-402. ஜெர்மனியில் கட்டப்பட்ட இந்தக் கப்பல் 40 ஆண்டுகள் பழமையானதாகும்.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இந்த கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கி கப்பல் இந்தோனேசியாவின் பாலித்தீவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.அப்போது திடீரென கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர்.இதனையடுத்து இந்தோனேசிய கடற்படை, நீர்மூழ்கி கப்பல் மாயமானதாக அறிவித்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது.
கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் 500-க்கும் அதிகமானோர் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.அதுமட்டுமின்றி நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தோனேசியாவுக்கு உதவின.
இந்த சூழலில் 3 நாட்களாக இரவு பகலாக நடந்த மீட்பு பணிகளுக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை, மாயமான நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் இருந்து, கப்பலின் பாகங்கள் சிலவற்றை மீட்புக்குழுவினர் கண்டெடுத்தனர்.இதனையடுத்து மாயமான நீர்மூழ்கி கப்பல் மீட்க முடியாத ஆழத்தில் மூழ்கி விட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்தது. மேலும் கப்பலில் இருந்த மாலுமிகள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் கடற்படை தெரிவித்தது. அதேசமயம் கடலில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகள் தொடர்ந்தன.
இந்த நிலையில் கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் 3 துண்டுகளாக உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்ததாக இந்தோனேசிய ராணுவம் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இதுகுறித்து ராணுவ தலைமைத் தளபதி ஹாதி ஜஹ்ஜந்தோ பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
மாயமான நங்காலா நீா்முழ்கிக் கப்பலின் செங்குத்து சுக்கான் அமைப்பு, நங்கூரங்கள் மற்றும் பிற முக்கிய பாகங்கள் அடங்கிய கடலடிப் படங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அந்தப் படங்களை ஆதாரமாகக் கொண்டு, நங்காலா நீா்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிவிட்டது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். மேலும் கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்து விட்டனர் என்பதை ஆழ்ந்த சோகத்துடன் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக இந்தோனேசிய கடற்படை தளபதி யூடோ மார்கோனோ இது பற்றி கூறுகையில் ‘‘சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கேரமாக்கள் பொருத்தப்பட்ட அதிநவீன ஆழ்கடல் ரோபோ கருவி, 2,600 அடி ஆழத்தில் நங்காலா நீா்மூழ்கிக் கப்பல் 3 துண்டுகளாக உடைந்து கிடப்பதைக் கண்டறிந்தது’’ என்றார்.அதே சமயம் நீர்மூழ்கி கப்பல் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை இரு தளபதிகளும் தெளிவுபடுத்தவில்லை.
இதனிடையே நீர்மூழ்கி கப்பல் விபத்தில் பலியான மாலுமிகள் அனைவரும் இந்தோனேசியாவின் சிறந்த தேசபக்தர்கள் என்று அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ புகழாரம் சூட்டினார்.இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘இந்தோனேசியர்கள் அனைவரும் இந்த சம்பவம் குறித்து தங்கள் ஆழ்ந்த சோகத்தை தெரிவிக்கின்றனர். குறிப்பாக விபத்தில் பலியான மாலுமிளின் குடும்பங்களுக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றனா்’’ எனக் கூறினார்.