ஜனநாயக நாடான இலங்கையில் கருத்து சுதந்திரத்தை ஒழிக்கும் வகையில் சர்வாதிகார போக்கில் எவரும் செயற்பட முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
12 இலட்சம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்து அவற்றை 9 இலட்சம் பேருக்கு முதற்கட்டமாக வழங்கியுள்ள போதிலும் , தற்போது இரணடாம் கட்டமாக வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு பதிலாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கின்றனர். அத்தோடு இவ்வாறு கருத்து வெளியிடுபவர்களின் சமூக வலைத்தள கணக்குகளும் முடக்கப்படுகின்றன.
இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். இங்கு சகலருக்கும் கருத்து சுதந்திரம் காணப்படுகிறது. அதனை ஒழிக்கும் வகையில் சர்வாதிகார போக்கில் எவரும் செயற்பட முடியாது.நாம் பழிவாங்கும் அரசியலைக் கற்கவில்லை.மக்களின் நலனுக்காக செயற்படுகின்ற சுபீட்சமான நாட்டை உருவாக்கும் அரசியலையே நாம் கற்றுள்ளோம். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றார்.