இந்தியாவில் கடந்த வாரம் முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டல் மரணங்கள் நடந்து வருகின்றன. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.இந்நிலையில், நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் இந்தியில் டுவிட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில் (இந்தியில்) கூறியதாவது:கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படாதவர்கள் யாருமில்லை. இந்தியா ஒரு கடினமான கட்டத்தைக் கடந்து செல்கிறது என்பதை நாங்கள் அறிவோம். பிரான்ஸ் மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் மற்றும் 8 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பும். ஒவ்வொரு ஜெனரேட்டரும் சுற்றுப்புறக் காற்றிலிருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்வதன் மூலம் ஒரு மருத்துவமனையை 10 ஆண்டுகள் தன்னிறைவு அடையச் செய்யலாம்.
பிரான்சும், இந்தியாவும் எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். எங்கள் அமைச்சகங்களும், துறைகளும் கடுமையாக உழைத்து வருகின்றன. பிரெஞ்சு நிறுவனங்கள் ஒன்றிணைகின்றன. நம் நாடுகளுக்கிடையிலான நட்பின் பின்னணியில் இந்த நம்பிக்கை உள்ளது. ஒற்றுமை என்பது நம் தேசத்தின் இதயத்தில் உள்ளது. இது நம் நாடுகளுக்கு இடையிலான நட்பின் மையத்தில் உள்ளது. நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.