கொரோனா தொற்றின் முதல் அலையின்போது அமெரிக்கா உள்பட உலக நாடுகள் பலவற்றுக்கு இந்தியா மருந்து சப்ளை செய்து உதவியது. ஐ.நா.சபையும் இந்தியாவின் சேவையை பாராட்டியது. ஆனால் கொரோனா 2-வது அலையில் இந்தியா மற்ற நாடுகளைவிட அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. தினந்தோறும் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை எகிறிக்கொண்டு செல்கிறது. நேற்று 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 3 ஆயிரத்து 293 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர்
இதுபோன்ற இக்கட்டான நிலையில் இந்தியா கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் சமயத்தில் உலக நாடுகள் பல இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன. இந்த நிலையில் ரஷியாவும், இந்தியாவுக்கு உதவுவதாக நேற்று அறிவித்துள்ளது.“இந்திய-ரஷிய கூட்டுறவின் அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ரஷியா கணிசமான உதவிகளை வழங்கும். இதற்காக ரஷிய அவசர சேவைகளுக்கான விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப ரஷிய தலைமை முடிவு செய்துள்ளது” என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், செயற்கை நுரையீரல் காற்றோட்டத்திற்கான எந்திரங்கள் மற்றும் பிற தேவையான மருத்துவ பொருட்கள் விமானத்தில் சில நாட்களில் வந்து சேரும் என்று தெரிகிறது.ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு உதவுவதாக உறுதியளித்து உள்ளன