“நில் கவனி முன்னேறு”.
பார்வை 01/2009 மே மாதம் எமது இனத்திற்கான விடுதலைப்போர் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழீழ மீட்புக்கான அறப்போரை முன்னகர்த்தவேண்டிய பொறுப்புகள் அதிகரித்து இருந்த காலம். ஏற்கனவே எமது புலம்பெயர்ந்த தமிழீழ செயற்பாட்டாளர்கள் கேபி அணியாகவும் கஸ்ரோ அணியாகவும் பிரிந்து செயற்படதொடங்கியிருந்த காலம் என்றும் சொல்லலாம் , அல்லது அவ்வாறான பிரிவினையினையை மக்கள் உணர்ந்து கொள்ளகூடியவாறு வெளித்தெரிந்த காலம் என்றும் சொல்லலாம்.. அவ்வாறான ஒரு சூழலில் சிறையில் இருந்து விடுதலையான பரிதி அவர்கள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை பொறுப்பெடுத்து கொண்டதுடன் தமிழீழ விடுதலைப்புலிகளை மீள ஒருங்கிணைக்கும் பணியையும் ஏற்று கொள்கின்றார். தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியமான பொறுப்பாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட அவர் அவர்கள் அனைவரையும் இணைத்து உருவாக்கப்பட்ட செயற்பாட்டு அணிக்குள் முக்கியமான பணியை பொறுப்பெடுத்து செயற்பட முன்வருகிறார். வெளித்தோற்றத்திற்கு ஈழவன் என்றபோராளியை ஒருங்கிணைப்பின் பொறுப்பாளராக வெளியே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் உண்மையான பொறுப்பாளராக பரிதி அவர்களை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் நகர்த்தப்பட்ட காலம் அது.
தமிழகத்தில் நெடுமாறன் ஐயா முள்ளிவாய்க்கால் முற்றத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டிருந்த தருணம் திரு.M.நடராஜன் அவர்கள் தனது நிலத்தை வழங்கி நினைவு முற்றத்தை உருவாக்கும் பணிக்கான தொடக்கத்தை உருவாக்கியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கு உழைத்த அனைவரையும் இணைத்து ஒரு அரசியல் சக்தியை உருவாக்கும் பணியை மேற்கொள்ளும் முயற்சியை முள்ளிவாய்கால் முற்றத்தில் இருந்து தொடங்கும் புனிதமான புரட்சிகர செயற்பாடுகளை நெடுமாறன் ஐயா அவர்கள் முன்னெடுத்திருந்தார். யார் யார் எந்த கட்சியுடன் இணைந்து செயற்பட்டாலும் தமிழீழம் தொடர்பான விடயத்தில் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் பயணிக்க வேண்டும் என்ற விடயம் எல்லா தமிழீழ ஆதரவாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. குறிப்பாக இந்த முயற்சியில் கட்சிவேறுபாடுகளை , இயக்க வேறுபாடுகளை கடந்து தமிழீழ ஆதரவாளர்கள் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் ஒருங்கிணைந்து நின்றவர்களாக..
திரு.வேல்முருகன்
திரு.வை.கோபாலசாமி
திரு.தொல்திருமாவளவன்
திரு.கொளத்தூர் மணி
திரு.நடராஜன்
திரு.ராமதாஸ்
திரு.தியாகு
திரு.சு.ப.வீரபாண்டியன்
திரு.வீரமணி
போன்றவர்களை குறிப்பிடலாம். இன்னும் வெளித்தெரியாத எத்தனையோ ஆதரவாளர்களது ஒருங்கிணைந்த ஆதரவு செயற்பாட்டு ரீதியில் எழிச்சியை ஏற்படுத்தி இருந்த காலம் அது. இறுதி யுத்தத்தில் இருந்து எதிரியிடம் சரண்டையாது தப்பிவந்த விடுதலைப்புலிகளின் அணிகள் தமிழகத்திலும் , ஆந்திராவிலும் , கேரளாவிலும் சில ஆரவாளர்களின் உதவியுடன் தங்கவைக்கப்படுகிறார்கள். எதிரியினால் கைதுசெய்யப்பட்டு தந்திரமாக தப்பிவந்தவர்களும் தமிழகம் வந்து பாதுகாப்பான இடங்களில் தங்களை தற்காத்து கொண்டு உருமறைவு வாழ்வை தொடங்கினார்கள். இந்த நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் தமது உறவுகளுக்கான உதவிகளை வழங்க பல வழிகளை பயன்படுத்த தொடங்கியிருந்த காலம் அது. பலபோராளிகளை இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அழைக்கும் முயற்சிகள் , பலபோராளிகளது பிள்ளைகளின் கல்விசெயற்பாடுகளை கவனிக்கும் செயற்பாடுகள் , பலபோராளிகளின் மருத்துவ உதவிகள் என்று எத்தனையோ ஏராளமான உதவிகளை எமது தமிழக உறவுகளுடன் இணைந்து புலம்பெயர்ந்த தமிழீழ மக்களும் செய்துவந்த காலம்.
ஒவ்வொரு போராளியும் தனது சுயத்தை மறைத்து தம்மை விடுதலைப்புலிகள் என்று வெளித்தெரியாதவாறு தமது அத்தனை அடையாளங்களையும் மறைத்து தங்களை தற்காத்துகொண்டு இருந்த காலம் அது. ஆனால் எமது தமிழக உறவுகளிடன் சில சலுகைகளை பெற தங்களை விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர்களாக காட்டி விளம்பரப்படுத்திக் கொண்டு இருந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இந்த சூழலில் இந்தியாவில் இருந்த தமிழீழ ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் ( விடுதலைப்புலிகளின் தொடர்பில் இயங்கியவர்கள்) தமது செயற்பாடுகள் தொடர்பாக தமக்கு ஏதாவது சந்தேகங்கள் எழும்போது தமது தொடர்புகளூடாக தெளிவுபெற்றே தமது பணிகளை செய்து வந்தார்கள். அந்தவகையில் தமிழீழ விடுதலைக்கான ஆதரவு நிலைப்பாட்டில் கட்சிபேதங்களை கடந்து இணைந்து பயணிக்கும் முடிவினை தமிழீழ விடுதலைப்புலிகளின் இந்திய செயற்பாட்டுக்கு உரிய பொறுப்பாளர்களும் வரவேற்று அந்த முயற்சிக்கான தம்மாலான அனைத்து ஆதரவையும் வழங்கி இருந்தார்கள்.
அதாவது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து எமது இனத்திற்கான போராட்டத்தை அறத்தின் வழியில் ஒருங்கிணைந்த சக்தியாக முன்னெடுக்கும் பணியை விடுதலைப்புலிகளது ஒருங்கிணைந்த தலைமை செயற்படுத்தி இருந்தது.
அந்த வகையில் தாயகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பை பலமான சக்தியாக தொடந்தும் பயணிக்க வைப்பது என்ற பொறுப்பை
திரு.மாவை அண்ணன் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைக்கும் பணிகளையும் சமநேரத்தில் ஒழுங்குபடுத்தப்படுகிறது. திரு.சம்பந்தன் ஐயாவினது தலைமையின் கீழ் இயங்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டு முடிவுகளை திரு. மாவை அண்ணன் அவர்களே விடுதலைப்புலிகளோடு கலந்து பேசி தொடர்பாளராக செயற்பட்டு வந்தது யாவரும் அறிந்ததே. மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பிற்கு திரு.தமிழ்ச்செல்வன் அவர்களிடம் திரு.சம்பந்தன் அவர்களை பரிந்துரை செய்தவரும் திரு.மாவை அண்ணன் அவர்களே. அந்த வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் அரசியல் செய்யும் தமிழர்களது ஏக பிரதிநிதிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பயணிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து இருந்தார்கள்.
இந்த ஒழுங்குகள் அனைத்தையும் நிதானமாக திட்டமிட்டவாறு தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் செயல் வரைபை செயற்படுத்தும் முயற்சியில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீள ஒருங்கிணைந்திருந்த காலம் அது…..
இந்த முயற்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆறுபேர் அடங்கிய செயற்பாட்டு குழுவினர் தகவல்களை ஒருங்கிணைப்பதும் , திட்டங்களுக்கான கட்டளைகளை வழங்குவது என்ற ரீதியில் ஒருங்கிணைந்திருந்த காலம். இந்த நிலையில் புலம்பெயர்ந்த , தமிழக , தாயக உறவுகளாக இணைந்து நின்ற அனைத்து செயற்பாட்டாளர்களிடமும் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டடிருந்த பிரதானமான கட்டளை “ எந்த செயற்பாட்டாளர்களையும் , எந்த அமைப்புக்களையும் எவரும் எங்காரணம் கொண்டும் விமர்சிக்க வேண்டாம். மாறாக யாரதும் செயற்பாடுகளில் உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் அவற்றை எங்களுக்கு உரியமுறையில் அறியத்தாருங்கள். மாறாக எமது ஆதரவுத்தளத்திற்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் எந்த செயற்பாடுகளிலும் எவரும் ஈடுபட வேண்டாம்” ஒரு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலில் , அதுவரை ஆயுத இயக்கமாக இருந்த அமைப்பின் கட்டளைகளை அறம்சார்ந்த போராட்டவடிவில் மீறுபவர்கள் மீது எவ்வாறு எதிர்வினையாற்ற முடியும் என்ற கேள்வி நிறைந்த காலம் அது. அந்தவகையில் அவதூறுகளை பரப்பி அமைப்புகளுக்குள் குழப்பம் விளைவித்தவர்கள் தொடர்பாக ,
அவர்கள் வாழ்ந்த நாட்டு சட்ட எல்லைக்குள் அவர்கள் மீது எவ்விதம் நடவெடிக்கை எடுப்பது என்று முடிவுசெய்ய முடியாமல் இருந்த சூழல் அது என்பதே பொருத்தம். இந்த நிலையில் கூடியவரை அவர்கள் அனைவரையும் நட்போடு அணுகி அவர்களது செயற்பாடுகள் ஏற்படுத்தும் பின்னடைவுகளை விளங்கப்படுத்துவதே ஒரே தீர்வாக ஏற்றுக்கொள்ள படுகிறது. இந்த நிலையில் புலம்பெயர்ந்த கட்டமைப்பிற்குள் பலகுழப்பங்களை ஏற்படுத்துபவர்களாக “மீடியா கௌவுஸ்” என்ற பாரிஸ் ஈழமுரசு, சங்கதி 24 குடும்பமாக அறியப்படும் செயற்பாட்டாளர்களது கறுப்பு மின்இதழ் இனங்காணப்பட்டு அதனது பொறுப்பாளர்களுக்கு குறித்த விடயத்தை நிறுத்துமாறு பலதடவைகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் விளைவு ,அதுவரை அநாமதேய மின்னிதழாக வந்த கறுப்பின் செயற்பாடுகளை ஈழமுரசு என்ற பத்திரிகை வெளிப்படையாகவே செய்ய தொடங்கியது. அதாவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஒருங்கிணைந்த செயற்பாட்டை சிதைக்கும் பணியை ஈழமுரசு குடும்பம் தமது முழுநேர பணியாக முன்னெடுத்திருந்த காலம் அது..,
ஏன் இவர்கள் இப்படி தனிமனித அவதூறுகளை மக்களிடம் பரப்பி அமைப்புக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கிறார்கள் என்று தெரியாமல் , அவர்களுக்கு பலவழிகளிலும் அவர்களது தவறுகளை விளங்கப்படுத்த முயற்சித்தும் தோல்விகண்ட நிலையில் இனி எவ்விதம் இவர்களை கையாள்வது என்ற சிந்தனை வந்திருந்த காலம்… தமிழகத்தில் திரு.நெடுமாறன் ஐயா தலைமையிலான தமிழீழ ஆதரவுச் செயற்பாட்டாளர்களது ஒற்றுமையினை சீர்குலைக்கும் விதமாக அவர்கள் தொடர்பான தவறான கருத்துக்களை தமிழகம் எங்கும் பரப்புரை செய்ய படுகிறது, அதன் பின்னணியில் நாம் தமிழர் அமைப்பின் செயற்பாடு கண்டறியப்படுகிறது.. நாம் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகள் தமிழ்தேசியம் சார்ந்தும் தமிழீழ ஆதரவு நிலை சார்ந்தும் இருந்த போதும் , அதுவரை தமிழீழ ஆதரவாளர்களாக இருந்தவர்களை துரோகிகள் அளவிற்கு சித்தரிக்கும் செயற்பாடுகளை திட்டமிட்ட கருத்துருவாக்கங்கள் ஊடாக கட்டவிழ்த்து பரப்ப படுகிறது… தாயகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பலரது செயற்பாடுகளால் ஒற்றுமை குலைக்கப்பட்ட கட்சியாக உருக்குலைக்கப்படுகிறது.
தமிழீழ தேசிய செயற்பாட்டில் தம்மை முக்கிய செயற்பாட்டாளர்களாக இனங்காட்டி கொண்டவாறே எமது இனத்தின் விடிவிற்காக தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் தூரநோக்கத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆதரவு செயற்பாட்டு தளத்தினை அழிக்கும் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்த பட்டதை கூர்ந்து அவதானிக்கும் அனைவராலும் இனங்காண முடியும்.
பார்வை தொடரும்..
- அதியமான்.
அடுத்த இதழில்..