கொரோனா வைரசானது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணியில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவ்வகையில், விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியான கார்னிவாக்-கோவ் என்ற மருந்தை ரஷியா கண்டுபிடித்து, கடந்த மாதம் பதிவு செய்தது. இதுவே விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியாகும்.
நாய்கள், பூனைகள், நரிகள் மற்றும் மிங்க் ஆகிய விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கியது கண்டறியப்பட்டதையடுத்து, தடுப்பூசி பதிவு செய்யப்பட்டது. அரசு ஒப்புதல் அளித்ததும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கின. தற்போது முதல் தொகுப்பாக 17000 டோஸ்கள் தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் ரஷியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வேளாண் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெர்மனி, கிரீஸ், போலந்து, ஆஸ்திரியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா, லெபனான், ஈரான் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை வாங்க ஆர்வம் காட்டியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் இந்த வைரஸ் பரவும் அபாயம் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது. பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களை பாதுகாக்கவும், வைரஸ் பிறழ்வுகளைத் தடுக்கவும் தடுப்பூசி உதவும் என ரஷிய வேளாண் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியது.