இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது.வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. ஆஸ்திரேலியா நாடும் இந்திய விமானங்களுக்கு மே 15-ந் தேதி வரை சமீபத்தில் தடையை அறிவித்தது.இந்தியாவுடனான நேரடி விமான சேவையை நிறுத்தியது. இதற்கிடையே இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியது தெரியவந்தது.
இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம்ஜாம்பா, கனேரிச்சர்சன் உள்பட 3 பேர் தோகா வழியாக திரும்பி இருந்தனர்.இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய குடி மக்கள் நாடு திரும்பி வந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் 66 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவு வருகிற 3-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் கிரெக்ஹன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலகின் 2-வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகளை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் மே 3-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த தடையை மீறினால் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். எங்களது இதயங்கள், இந்திய மக்களிடம், நமது இந்திய – ஆஸ்திரேலிய சமூகத்திடமும் இருக்கிறது.இந்த முடிவுகளை அரசாங்கம் எளிதில் எடுக்க வில்லை. ஆஸ்திரேலிய பொது சுகாதாரம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அமைப்புகளின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகளை குறைத்து நிர்வகிக்கவும் உதவும்.