இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 பணக்கார நாடுகள், ஜி 7 நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. தற்போது இதன் தலைவராக இங்கிலாந்து செயல்பட்டு வருகிறது.ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டுக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்துள்ளது. லண்டனில், லங்காஸ்டர் ஹவுஸ் அரங்கத்தில் இந்த 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.மேற்கண்ட 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்டனர். இதுதவிர, மாநாட்டின் சில நிகழ்வுகளில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுக்கு இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொருவருக்கிடையே பிளாஸ்டிக் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.மாநாட்டில், மியான்மர் ராணுவ புரட்சி, எதியோப்பியா பிரச்சினை, ஆப்கானிஸ்தானில் பன்னாட்டு படைகள் வெளியேறுவதால் உண்டாகும் சூழ்நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஜி-7 நாடுகளிடையே கருத்தொற்றுமை உருவாக்குவது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவிப்பது, ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை சிறையில் அடைத்தது ஆகிய பிரச்சினைகள் குறித்தும் பேசப்படுகிறது.