கடந்த 2010 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா தமிழ்ப் பிரதேசங்களை வெற்றிகொண்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட சர்வதேச சமூகத்திற்கும், அவருக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தமே காரணமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை முற்பகலில் உரையாற்றியபோது அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு பேசிய அவர், யாழ் – மிருசுவில் படுகொலை வழக்கில் விடுலையாக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவின் விடுதலையை எதிர்க்கின்ற பொன்சேகா, ஏன் 12,500 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுகையில் எதிர்ப்பு வெளியிடவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை அமைச்சர் வீரசேகரவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக சபையில் குறிப்பிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவ சீருடை போர்வையில் படுகொலை செய்திருந்தால் நிச்சயம் சரத் வீரசேகர, வசந்த கரன்னாகொட அல்லது சுனில் ரத்நாயக்க மாத்திரமல்ல, குற்றம் செய்த எவர் வேண்டுமானாலும் தூக்குத் தண்டனையே வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.