அராஜக அரசியலில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம்.

அராஜக அரசியலில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. இவ்வாறான செயற்பாடானது சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு அராஜக அரசியலை அரசாங்கம் செய்து வருகின்றது என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் காரியாலயத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கின்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வந்து செல்வதற்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்கும் முழுமையான உரிமை இருக்கின்றது. ரிஷாட் பதியுதீன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். அவரை ஒரு குற்றவாளியாக இதுவரை இனம் காணப்படவில்லை. எனவே பொது மக்களின் வாக்கு பலத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கும் இங்கு நடைபெறுகின்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லை.

இது தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்த நிலையில், அவரை நாடாளுமன்றம் அழைத்து வர வேண்டுமாக இருந்தால் சபாநாயகரின் கையெழுத்திடப்பட்ட ஆவணம் தேவை என குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆனால் நேற்று முன்தினம் மாலை ரிஷாட் பதியுதீனுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை என இன்னுமொரு காரணம் குறிப்பிடப்பட்டது.

அதேவேளை நேற்று நாடாளுன்றத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது வேண்டுகோளின் பேரில் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அது விசாரணைக்கு இடையூறாக அமையும் எனவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவை முன்னுக்கு பின் முரணான கருத்தாகவே இருக்கின்றது. இந்த விடயமானது எந்த சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என எனக்கு தெரியவில்லை.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சட்டத்தை தனது கையில் எடுத்து செயற்பட முடியுமா? அது எந்த சட்டத்திற்கு உட்பட்டது என்பது புரியவில்லை. இந்த விடயத்தின் மூலம் தெளிவாக தெரிகின்ற விடயம் என்னவென்றால் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிடுகின்றது. இது ஜனநாயக நாடா? அல்லது இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற நாடா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே இதன் மூலம் இந்த நாட்டிற்கு இந்த அரசாங்கம் என்ன சொல்ல வருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றவர்களின் குரல் வளையை நசுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோவையும் கைது செய்வதற்கு திட்டமிட்டு வருகின்றது. இவையெல்லாம் அராஜக அரசியலின் வெளிப்பாடாகும்.

அரசாங்கத்தின் திட்டம் என்னவென்றால் எங்களுடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இல்லாது செய்ததைப் போல ரிஷாட் பதியுதீனுடைய நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை அனைவராலும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

எனவே அரசாங்கம் தெளிவாக ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும் எதிர்கட்சிகளின் குரல் வளையை நெருக்கியோ அல்லது எங்களை அச்சுறுத்தியோ எங்களுடைய செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போத கருத்து தெரிவித்துள்ளார்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *