சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.கொரோனா பாதிப்பு பெருந்தொற்று என கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரசால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியும் நடந்தன.
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் பைசர் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.இதேபோல் அஸ்ட்ரா ஜெனகா- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கோவேக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.இதன்மூலம் சீனாவில் தயாரான தடுப்பூசிக்கு முதல்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே சமயம் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6-வது தடுப்பூசி இதுவாகும்.
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் செயல்திறன் 79 சதவீதம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மற்ற தடுப்பூசிகளைப் போலவே இதுவும் 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 22 நாடுகள் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பும் ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.