பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ள யாழ். மாநகர முதல்வரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்திற்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ். மாநகர சபைக்குள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்து்ளார்.அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்த பதிவினை இட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பயங்கரவாத விசாரணை பிரிவு, சர்ச்சைக்குரிய யாழ் மாநகர சபையின் தூய்மை கண்காணிப்பு அணியினர் ஐவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளது.அப்பாவிகளான இவர்களை, ‘பயங்கரவாத’ அடையாளத்துக்குள் சிக்காமல் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு, யாழ். மாநகர சபைக்கு இருக்கின்றது.
கட்சி பேதங்களுக்கு அப்பால், அனைத்துக் கட்சி யாழ். எம்.பிக்களினதும், அரசியல், சட்டரீதியான கூட்டு முயற்சிகள், இது தொடர்பில் அவசியம். முக்கியமாக, யாழ். மாவட்ட அரசின் பங்காளி அமைச்சர்கள், எம்.பிக்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும் .அது அப்படியிருக்க, இந்தப் பணியாளர்களின் அதிகாரபூர்வ பணிப்பெயர் என்ன? ‘யாழ் மாநகர காவல் படையா’ அல்லது ‘தூய்மை கண்காணிப்பு அணியா’? ஊடகங்களுக்கு இது பற்றிய தெளிவை மாநகரசபை தர வேண்டும் – என்றுள்ளது.