ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்க வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின.அமெரிக்க படைவீரர்களை ஈராக்கிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் ஈராக்கில் அவர்கள் தங்கியிருக்கும் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் ஐன் அல்-ஆசாத் விமானப்படை தளத்தை குறிவைத்து இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளுடன் கூடிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ராணுவ தளம் கடுமையாக சேதமடைந்தது. ஆனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என ஈராக் ராணுவம் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்குள் நான்காவது முறையாக அமெரிக்க படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.