கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளுக்கு அப்பால் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான கண்டறியப்படாத நோய்த்தொற்றுடையவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது என பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயரும் மற்றும் இரண்டு வாரங்களில் அது உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின், பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் பரிசோதிக்கப்படவில்லை. அவர்கள் பரிசோதிக்கப்பட்டதும் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு உட்பட மேற்கு மாகாணம் இன்னும் அதிக ஆபத்துள்ள பகுதி என்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய கூடுதல் சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.பொதுமக்களுக்கு உண்மையான நிலைமையை வழங்க அதிகாரிகள் தவறியது உட்பட , கொழும்பில் பெரும்பாலான மக்கள் இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமை என்பன வைரஸ் மேலும் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மூன்றாவது அலை இருக்காது என்று கூறி சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பொது சுகாதார ஆய்வாளர்கள் மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை மட்டுமே அமுல்படுத்துவதாகவும், கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.