போர் மூளும் அபாயம் – அச்சத்தில் உறைந்த மக்கள்

போர் மூளும் அபாயம் – அச்சத்தில் உறைந்த மக்கள்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன போராளிகளுக்கும் தீராப்பகை நிலவி வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று 2 சம்பவங்கள் நடந்தன. ஏக்ரே என்ற இடத்தில் ஒரு யூதர், அரேபியர்களால் தாக்கப்பட்டார். பாட்யாம் என்ற இடத்தில் பாலஸ்தீனியர் ஒருவரை யூதர் கூட்டம் ஒன்று காரில் இருந்து இழுத்து வெளியே போட்டு தாக்கியது. அதைத்தொடர்ந்து இருதரப்பு மோதல்கள் வலுத்து வருகின்றன. காசாமுனைப்பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்துவதும், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் வீச்சு மூலம் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வருகிறது.

காசா நகரில் அமைந்திருந்த அல் ஷாரூக் கோபுரத்தை இஸ்ரேல் வான்தாக்குதல் அழித்தது. இது ஹமாஸ் அமைப்பினருக்கு பேரிடியாக அமைந்தது. காரணம், இந்த கட்டிடத்தில்தான் ஹமாஸ் அமைப்பினரின் அல் அக்சா டி.வி. நிலையம் இயங்கியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் 10 மூத்த ராணுவ பிரமுகர்களை கொன்று விட்டதாகவும், ஏவுகணை தளத்தினை குறி வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் கூறியது.ஹமாஸ் அமைப்பினரும் தங்கள் மூத்த தளபதியும், பிற தலைவர்களும் இஸ்ரேல் தாக்குதலில் வீர மரணம் அடைந்ததாக தெரிவித்தனர்.

காசா மீதான தங்களின் தாக்குதல் 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிற தாக்குதல்களில் மிகப்பெரியது என இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கூறின.ஆனால் ஹமாஸ் அமைப்பின் போராளிகளும் இடைவிடாது இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை தொடர்கின்றனர். நேற்று முன்தினம் காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் 130 ராக்கெட்டுகளை வீசினர். இரு தரப்பு மோதல்களில் 67 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 7 இஸ்ரேலியர்கள் பலி ஆகினர்.

இதுபற்றி நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறுகையில், வன்முறைகள் நடந்து வருகிற நகரங்களுக்கு படைகளை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். அரேபியர்கள் யூதர்களை தாக்குவதையும், அரேபியர்களை யூதக்கூட்டத்தினர் தாக்குவதையும் நியாயப்படுத்த முடியாது என அவர் கூறியதாக உள்ளுர் ஊடகம் கூறியது.இதற்கிடையே, இரு தரப்பு மோதல் வலுத்ததில் இருந்து இதுவரை இஸ்ரேல் மீது காசா முனைப்பகுதியில் இருந்து 1,600 ராக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் ஜோனத்தான் கான்ரிகஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே காசா முனையில் இருந்து ராக்கெட் தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கள் தொலைபேசியில் அழைத்துக்கூறினார். வன்முறை பதற்றம் குறைவதின் அவசியத்தையும், இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் பாதுகாப்புடன் வாழ உரிமை உண்டு என்று ஜோ பைடன் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே காசா பகுதி போர்க்களமாக காணப்படுவதாகவும், பல கட்டிடங்கள் தரை மட்டமாகி இருப்பதாகவும், இஸ்ரேலிய படையின் வான்தாக்குதலில் ஏராளமான கார்கள் உருக்குலைந்து போய்விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.இரு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி உள்ளது.அதே நேரத்தில் இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் வீச்சுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நடுவானில் தடுத்து அழிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.தொடர் மோதல்களால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் ஹமாஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி உள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *