உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி வாங்குவதற்கான நன்கொடையை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்துமா என்ற சந்தேகத்தை இலங்கை தாதியர் சங்கம் வெளியிட்டுள்ளது.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவரான சமன் ரத்னப்பிரிய, நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை உக்கிரமடைந்திருப்பதாக தெரிவித்தார்.இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவியாக வழங்கியிருக்கின்றது. 16.1 பில்லியன் ரூபாவாக இது மதிப்பிடப்பட்டுள்ளது.அஸ்ட்ரா செனகா 201 இலட்சம் தடுப்பூசிகளை இந்தப்பணத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யமுடியும்.அதில் இலங்கை சனத் தொகையில் 40 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியை அளித்துவிடலாம். இருப்பினும் அரசாங்கம் இதனைச் செய்யுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது என்றார்.