69-வது பிரபஞ்ச அழகிப் போட்டி புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் அண்ட் கேஸினோவில் நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மிகுந்த பாதுகாப்புடன் அழகிப் போட்டி நடத்தப்பட்டது. 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் மெக்சிகோ நாட்டின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியான தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டவரின் பெயரை அறிவித்தார். தனது பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ஆண்ட்ரியா மெஸா மகிழ்ச்சியில் உற்சாகக் குரலிட்டார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. பின்னர் மெஸாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் அழகி மகுடத்தை ஜோஜிபினி டுன்ஸி சூட்டினார்.
2-வது இடம் பிரேசில் நாட்டுப் பெண் ஜூலியா காமாவுக்குக் கிடைத்தது, பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா (27) 3-வது இடத்தைப் பெற்றார். இந்தியப் பெண் அட்லின் கேஸ்டிலினோ (மிஸ் இந்தியா) 4-வது இடத்தைப் பெற்றார்.முன்னாள் பிரபஞ்ச அழகிகள் செஷ்லி கிறிஸ்ட், பவுலினா வேகா, டெமி லீ டெபோ ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்தனர்.மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண்கள் 3-வது முறையாக பிரபஞ்ச அழகிப் பட்டத்தைத் கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன் கடந்த 2010இல் ஜிமினா நவரெட்டேவும், கடந்த 1991இல் லுபிடா ஜோன்ஸும் கைப்பற்றினர். 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மெக்சிகோவைச் சேர்ந்த பெண் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக முடிசூட்டப்பட்டார்.