பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் (வயது 69). இவர்தான் தற்போது நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர் கடந்த மாதம் ஜாமினில் வெளியே வந்தார். இதையடுத்து, அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு முறை மட்டும் வெளிநாடு செல்வதற்கு லாகூர் ஐகோர்ட்டு கடந்த வாரம் அனுமதி அளித்தது.
ஆனால் அவர் கத்தார் வழியாக லண்டன் செல்வதற்காக லாகூர் விமான நிலையத்துக்கு சென்றபோது, மத்திய புலனாய்வு படையினர் அவரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் ஷெபாஸ் ஷெரீப்பின் பெயரை சேர்த்துள்ளது.