அரசாங்கம் அவசரப்படுவது ஏன்?

அரசாங்கம் அவசரப்படுவது ஏன்?

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமொன்றில் மூன்றில் ஒரு பகுதி அரசியலமைப்பிற்கு முரணானவை என நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி. தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் அரசியல் , பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு ஆகிய மூன்று முக்கிய காரணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அவற்றுக்கு முரணான வகையிலுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தில் காணப்படுகின்ற 25 உறுப்புரைகள் அதாவது சட்ட மூலத்தில் மூன்றில் ஒரு பகுதி அரசியலமைப்பிற்கு முரணானவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.எனவே குறித்த 25 உறுப்புரைகளில் 16 உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்றும், எஞ்சிய 9 உறுப்புரைகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமல்ல, சர்வசன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் சட்டமூலமொன்றில் 25 உறுப்புரைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் , அவற்றில் 9 உறுப்புரைகள் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முதன்முறையாக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதே அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் கூட இந்தளவிற்கு சிக்கல் காணப்படவில்லை.எனவே துறைமுக நகர சட்ட மூலத்திற்கு எதிராக அரசியல் கட்சிகளும் , சிவில் அமைப்புக்களும் நீதிமன்றம் சென்றிருக்காவிட்டால் அரசியலமைப்பிற்கு முரணான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் இந்த முயற்சியை ஓரளவிற்கு தோற்கடித்திருக்கின்றோம். நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் இந்த சட்ட மூலத்தின் உறுப்புரைகள் பல மக்களின் இறையான்மைக்கு அப்பாற்பட்டதாக உள்ளதாகவும், மக்களின் இறையான்மையை புறந்தள்ளி இதனை நிறைவேற்ற முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு நிறைவேற்றுவதாயின் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டியது அத்தியாவசியமானது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் அரசாங்கம் மிகவும் சூட்சுமமான முறையில் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட முயற்சித்துள்ளது என்பதை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது.இலங்கையில் இறுதியான ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சியில் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் ஆட்சி காலத்தை மேலும் 6 மாதங்களால் நீடிப்பதற்கான திருத்தம் அரசியலமைப்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இந்த திருத்தத்தினை மேற்கொள்ள சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய 1982 இல் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இது அரசியலமைப்பு ரீதியாக சரி என்றாலும் , அரசியல் ரீதியாக மிகப்பெரும் தவறாகும். அதற்கமைய அரசியலமைப்பிற்கு முரணான விடயங்களை மாத்திரமே நீதிமன்றம் சுட்டிக்காட்டும். பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட மாட்டாது.

துறைமுக நகர சட்ட மூலத்தில் இவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கு முரணான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ராஜபக்ஷாக்களின் சொந்த இடங்களை யாருக்கு விற்றாலும் அது குறித்து எமக்கு எவ்வித கவலையும் இல்லை. ஆனால் துறைமுக நகர் என்பது தேசிய சொத்தாகும். அது மக்களின் உரிமையாகும். நீதிமன்ற தீர்ப்பின் படி அரசாங்கம் சர்வசன வாக்கெடுப்பை நடத்தும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீதிமன்றத்தினால் சுட்க்காட்டப்பட்டுள்ள 25 உறுப்புரைகளில் சில திருத்தங்களுடன் அதனை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கும். இந்த முயற்சியும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவும் இந்தளவிற்கு அவசரப்படவில்லை. ஆனால் பாரிய கொவிட் அபாயத்திற்கு மத்தியிலும் துறைமுக நகர் சட்ட மூல விவகாரத்தில் அரசாங்கம் இந்தளவிற்கு அவசரப்படுவதிலிருந்து , அரசாங்கத்தில் உயர் மட்டத்திலுள்ளோருக்கும் சீனாவிற்கும் இடையில் வெளியில் தெரியாத ஒரு இரசகிய ஒப்பந்தம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *