மியான்மர் நாட்டில் ஆங்சான்சூயி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.இதற்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். துப்பாக்கிசூடு சம்பவங்களும் நடந்தன. இதில் நூற்றுக் கணக்கானோர் பலியானார்கள்.தொடர்ந்து நாடு முழுவதும் ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவமும் தீவிரமாக உள்ளது.
இந்தநிலையில் இந்தியாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஜின் மாகாணத்தில் ராணுவத்துக்கு எதிராக போராட்டம் வெடித்து உள்ளது. இது மலைப்பிரதேசம் ஆகும். அங்கு ராணுவத்துக்கு எதிராக போராடுவதற்காக ஜின் லேண்ட் பாதுகாப்பு படையினர் அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.அவர்கள் ராணுவத் திற்கு எதிராக ஆயுத போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவர்கள் மீது ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதலை நடத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை 802 பேர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டு இருப்பதாக அரசியல் கைதிகள் உதவி சங்கம் அறிவித்து உள்ளது. தற்போது வரை ஆங்சான்சூயி உள்பட 4 ஆயிரத்து 120 அரசியல் கைதிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 20 பேருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போராட்டத்தால் மியான்மரில் தொடர்ந்து அமைதியற்ற நிலை நிலவி வருகிறது.