சவுதி அரேபியாவில் அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்

சவுதி அரேபியாவில் அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்

சவுதி அரேபியாவில் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் பணியிடங்களுக்கு செல்லுதல், பொது போக்குவரத்துகளில் பயணித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அந்த நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக சவுதி அரேபியா இருந்தது.‌ கடந்த ஆண்டு ஜூன்,

ஜூலை மாதங்களில் அங்கு வைரஸ் பரவல் ஜெட் வேகத்தில் இருந்தது.‌ தினந்தோறும் புதிதாக சுமார் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு வந்தது.‌ அதேபோல் கொரோனா உயிரிழப்பும் அப்போது உச்சத்தில் இருந்தது.இதையடுத்து சவுதி அரேபிய அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.அண்டை நாடுகளுடனான எல்லையை மூடுதல், சர்வதேச பயணங்களுக்கு தடை விதித்தல், உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்கு தடை விதித்தல் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலின் வேகத்தை சவுதி அரேபியா அரசு குறைத்தது.‌

இதற்கிடையில் சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. கொரோனாவை ஒழிப்பதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்பதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சவுதி அரேபியா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 3 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சவுதி அரேபியாவில் இதுவரையில் 1 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டு விட்டது.

தடுப்பூசியின் பலனாக சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளில் ஒரு சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் பணியிடங்களுக்கு செல்லுதல், பொது போக்குவரத்துகளில் பயணித்தல், அரசு அலுவலகங்களுக்கு செல்லுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரசை எதிர்த்து போராட ஆகஸ்டு 1, 2021 முதல் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் நுழைவதற்கும், எந்தவொரு கலாசார, அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில் இதுவரையில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 27 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதும், 7 ஆயிரத்து 188 பேர் கொரோனாவுக்கு பலியானதும் குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *