ஐ.நா மனித உரிமைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்!

ஐ.நா மனித உரிமைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12 ஆம் திகதி விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட நிலையில், இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.இதனையடுத்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் கடிதம் தயாரிக்கப்பட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பம் பெறுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.இக்கடிதம் ஐ.நாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹாநா சிங்கர் மூலமாக ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு ஆவணப்படுத்தக் கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,” 2009 மே 18ல் முடிவடைந்த கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருமுகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் அரச படையினரால் உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே உள்ளது.இது ஒரு வெட்கக்கேடான மனித குலத்துக்கு எதிரான செயல்பாடு. உலகில் உள்ள எவ்வகையான வலிமை பொருத்திய இராணுவத்தாலும் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனதில் இருக்கும் சம்பவங்களையும், நினைவுகளையும் அழிக்க முடியாது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை ஆத்திரத்துடனும், மனவேதனையுடனும், விரக்தியுடனும் தமிழ் மக்களின் பிரதிநிகளாகிய நாம் பதிவு செய்கிறோம். நினைவேந்தல்கள் தொடர்பாக அண்மையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் மனித உரிமைக்கும் எதிரான இந்த விடயத்தை ஆவணப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில்  கையொப்பமிடவில்லை.அத்துடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் சுகவீனம் காரணமாக நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்காமையால் அவர்களது ஒப்பம் பெறப்படவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் இதில் உடன்பாடு உண்டு என்ற நிலையில் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *