மனிதாபிமான அடிப்படையில் சரக்கு லாரிகள் காசாவிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி

மனிதாபிமான அடிப்படையில் சரக்கு லாரிகள் காசாவிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது.இதற்கிடையே, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 10-ம் தேதி மோதல் வெடித்தது.

இரு தரப்பும் மாறிமாறி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தின. காசா முனையில் இஸ்ரேல் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. மேற்கு கரை பகுதியிலும் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.11 நாட்கள் நடைபெற்ற இந்த சண்டை இருதரப்பு ஒப்பந்தத்திற்கு பின் நேற்று முடிவுக்கு வந்தது.ஆனாலும், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் மொத்தம் 296 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர், குழந்தைகள், பெண்கள் உள்பட 257 பேரும், மேற்கு கரை பகுதியில் 27 பேரும், இஸ்ரேலில் 12 பேரும் ( கேரளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த காசா முனைக்கு ஐ.நா. மற்றும் உலகின் பல நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவிப்பொருட்கள் அனுப்பிவைத்தன.சண்டை நடைபெறுவதற்கு முன்பிருந்தே காசா முனையின் எல்லைகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் அத்தியாவசிய பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்ல அனுமதித்திருந்தது.ஆனால், கடந்த 11 நாட்கள் நடைபெற்ற இந்த மோதலின் போது காசாவின் எல்லைகள் முழுவதையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எந்த ஒரு வாகனமும் காசாமுனைக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.

இதனால் ஐ.நா. மற்றும் உலக நாடுகள் அனுப்பிய உதவி பொருட்கள் காசாவிற்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் நேற்று அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் அனுப்பிய மனிதாபிமான ரீதியிலான உதவி பொருட்களை ஏற்றிவந்த சரக்கு லாரிகளை கிரம் ஷலோம் எல்லை வழியாக காசா முனைக்குள் செல்ல இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து உணவு, கொரோனா தடுப்பூசிகள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு உதவிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு 13 சரக்கு லாரிகள் இஸ்ரேலில் இருந்து காசா முனைக்குள் நுழைந்துள்ளன.இந்த உதவிப்பொருட்கள் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *