அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார். எனினும் துப்பாக்கி சூடு சம்பங்கள் குறைந்தபாடில்லை. ஆங்காங்கே உயிர்ப்பலி ஏற்படுகிறது.
இந்நிலையில், போலீஸ் அதிகாரியால் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட மினியாபோலிஸ் நகரில் நேற்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. மர்ம நபர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர் பெண்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.