உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரசின் தாயகமான சீனாவில், 40.49 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.இந்நிலையில் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மே 23-ந் தேதி நிலவரப்படி, 31 சீன பிராந்தியங்கள் 51 கோடியே 8 லட்சத்து 58 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளன என்று கூறியுள்ளது.
அதேநேரம், எத்தனை பேருக்கு ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன, ஒப்புதல் அளிக்கப்பட்ட எத்தனை தடுப்பூசிகள் எவ்வளவு எண்ணிக்கையில் போடப்பட்டுள்ளன என்ற தகவலை தெரிவிக்கவில்லை.140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட சீனாவில், வருகிற ஜூன் மாதத்துக்குள் 40 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று அந்நாட்டின் முன்னணி நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஸோங் நான்ஷான் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் சீன தடுப்பூசி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கூறுகையில், தங்கள் நாட்டு குடிமக்களில் 70 சதவீதம் பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போட சீனா திட்டமிட்டுள்ளது என்றார்.சினோவாக், சினோபார்ம், அதன் துணை நிறுவனமான சீனா நேஷனல் பயோடெக் குரூப் மற்றும் கான்சினோ பயோலாஜிக்ஸ் ஆகிய 4 நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு சீன அரசு இதுவரை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.