காங்கோ நாட்டின் கோமா நகர் அருகே நியிராகாங்கோ எரிமலை உள்ளது. அந்த எரிமலை, இரவு நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறியது. எரிமலை குழம்பு, பக்கத்து கிராமங்களுக்கு பரவியது.எரிமலை வெடிப்பு குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படாததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அலறியடித்து ஓடினர். சுமார் 30 ஆயிரம்பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். சிலர், அண்டை நாடான ருவாண்டாவில் தஞ்சம் அடைந்தனர். அங்கு சென்ற நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
எரிமலை வெடிப்பினால் 500-க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. தங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் பலரை காணவில்லை என்று ஒரு பெண் தெரிவித்தார். 15 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையான பலி எண்ணிக்கையை கணக்கிடுவது சிரமமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.170 குழந்தைகளை காணவில்லை. நிறைய குழந்தைகள், பெற்றோரை இழந்து அனாதை ஆகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.