உலகலாவிய பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கி வந்தது.ஆனால் பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தவறியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.இந்த சூழலில் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் முந்தைய நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகள் அப்படியே தொடர்வதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில் ‘‘இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உதவிகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் எதிர்காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றுமா என்பதை இப்போதைக்கு உறுதியாகக் கூறமுடியாது’’ என கூறினார்.