சீனாவின் கன்சூர் மாகாணத்தில் பேயின் நகர் சுற்றுலா தளத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த 22-ந் தேதி நடந்த 100 கி.மீ. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 172 வீரர்கள் பங்கேற்றனர்.அப்போது திடீரென்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டு உறைபனிமழை, அதிககாற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் ஏராளமான வீரர்கள் சிக்கி கொண்டனர். இந்த மோசமான வானிலையால் 21 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த நிலையில், 6 மாரத்தான் வீரர்களின் உயிரை ஆடு மேய்ப்பவர் ஒருவர் காப்பாற்றி உள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. ஜூ கெமிங் என்பவர் மலைப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போது வானிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவர் அவசர காலங்களில் உணவு, துணிகளை சேமித்து வைக்கும் குகைக்குள் தஞ்சம் அடைந்தார். அப்போது மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர் அசையாமல் அப்படியே நிற்பதை பார்த்தார்.உடனே அந்த வீரரை மீட்டு குகைக்குள் தூக்கி சென்றார். அவரது கை, கால்களுக்கு மசாஜ் செய்து முதல் உதவி அளித்தார். இதில் அவர் சகஜ நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து மேலும் 4 வீரர்களை குகைக்குள் அழைத்து வந்து உதவினார்.
இதில் அவர்கள் மயக்க நிலையில் இருந்து மீண்டனர். இதேபோல் உறைபனிமழையால் மயங்கி விழுந்த ஒருவரையும் காப்பாற்றினார்.இது குறித்து ஜூ கெமிங் கூறும்போது, சாதாரண காரியத்தை செய்த சாதாரண மனிதன் தான் நான். என்னால் காப்பாற்ற முடியாத சிலரும் இருந்தனர். 2 ஆண்கள் உயிரற்ற நிலையில் கிடந்தனர். அவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னை மன்னிக்கவும் என்றார்.ஜூ கெமிங்கால் காப்பற்றப்பட்ட ஜாங் சியாவோதோ கூறும்போது, என்னை காப்பாற்றிய நபருக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். அவர் இல்லாவிட்டால் நான் அங்கேயே விடப்பட்டு இருப்பேன் என்றார்.