உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது.முதலில் இந்த வைரஸ் அந்த நகரத்தின் விலங்கு உணவுச்சந்தையில் இருந்து பரவியதாக கூறப்பட்டது.பின்னர் உகான் ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்) இருந்து கசிய விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அமெரிக்க முந்தைய ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி அதிர வைத்தார்.கொரோனா தோன்றியது எங்கே என்பது பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், உகான் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் பலரும் உடல்நலம் பாதித்து 2019 இறுதியில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக சமீபத்தில் அமெரிக்க உளவு அறிக்கையில் தகவல்கள் வெளியாகின.இதனால் உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற ஊகம் மேலும் வலுத்துள்ளது. டிரம்பின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாகவும் இது அமைந்துள்ளது.
இதையடுத்து, கொரோனாவின் தோற்றம் எங்கே என்பதை உறுதியாகக் கண்டறிவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். “கொரோனா வைரசின் தோற்றம் தொடர்பான உறுதியான முடிவுக்கு வரத்தக்க வகையில், தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள்” என்று உளவு அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், இது தொடர்பாக உளவு அமைப்புகளுக்கு அவர் 90 நாள் கெடுவை விதித்துள்ளார்.ஜோ பைடனின் இந்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கை உலுக்குவதாக அமைந்துள்ளது.