அமெரிக்காவில் சான் ஜோஸ் ரெயில்வே பணி மனையில் சாமுவேல் காசிடி என்ற ஊழியர் துப்பாக்கியால் சக ஊழியர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 8 பேர் பலியானார்கள். பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.இந்த துப்பாக்கிச்சூடு நடந்த போது இந்திய வம்சாவளி ஊழியரான சீக்கியர் ஒருவர் துணிச்சலாக செயல்பட்டு பலரை காப்பாற்றி இருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.அவரது பெயர் தப்தேஜ் தீப் சிங் (வயது 37). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்தியாவில் பிறந்த அவர் பின்னர் அமெரிக்கா சென்று குடியுரிமை பெற்றார். அவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வேயில் பணி கிடைத்தது.
அவர் ரெயில் பைலட்டாக பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த போது அந்த பணிமனையில் அவர் இருந்தார். திடீரென ஊழியர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததும் ஊழியர்கள் அலறியடித்து ஓடினார்கள். அப்போது அவர்கள் வெளியேறுவதற்காக பாதையை திறந்துவிட்டு பலரை வெளியேற்றினார்.துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து விடாமல் தடுக்க தடுப்புகளையும் ஏற்படுத்தினார். பின்னர் அவர் படிக்கட்டு வழியாக கீழே வந்த போது அவரையும் சாமுவேல் காசிடி துப்பாக்கியால் சுட்டார்.
அதில் தப்தேஜ் தீப் சிங்கும் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். பலரை அவர் காப்பாற்றிய போதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. ஏராளமான ஊழியர்களின் உயிரை காப்பாற்றியதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.சக ஊழியர்கள் இது பற்றி கூறும்போது, ‘‘தப்தேஜ் தீப் சிங் ஒரு கதாநாயகன் போல செயல்பட்டு எங்களை எல்லாம் காப்பாற்றினார். ஆனால் ஒரு நல்ல மனிதரை நாங்கள் இழந்துவிட்டோம்’’ என்று வருத்தத்துடன் கூறினார்கள்.