பௌத்த பிக்கு ஒருவர் தம்புள்ளை நகரில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
திம்ரலாகலை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் மாத்தளே சாசரதன தேரர் என்ற பிக்குவே இந்த எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.
நடு வீதியில் அமர்ந்து நாட்டை திறக்குமாறு சத்தமிட்டு கோரிக்கை விடுத்துள்ளதுடன் பிக்குவை வீதியில் இருந்து அப்புறப்படுத்த தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முயற்சித்த போதிலும் அது முடியவில்லை.
இதனையடுத்து தம்புள்ளை மாநகர சபையின் மேயர் சென்று விசாரித்ததுடன் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவருடன் தொடர்புகொண்ட பின்னர்,பிக்குவை நகர சபைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன் பின்னர் நகர சபையின் அலுலகத்தில் இருந்து செயலாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள பிக்குவை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தன்னை கைது செய்வதில்லை எனக் கூறி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக சாசனரதன தேரர் கூறியுள்ளார்.
நாட்டை மூடுவதாக கூறி கடைகளை திறப்பதாகவும் பணக்கொடுக்கல் வாங்கல்களை செய்வதாகவும் இப்படி நாட்டை மூடி பயனில்லை எனவும் நாட்டை மூடுவது என்றால் முழுமையாக மூட வேண்டும் எனவும் பொய்களை பேசாது நாட்டை திறக்குமாறும் தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சாசனரதன தேரர், ஜனாதிபதி மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.