அதுரலிய ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கட்சி கோரியது.
இருப்பினும் அப்படியான எந்தவொரு உடன்படிக்கையும் இல்லை என தெரிவித்து அதுரலிய ரத்ன தேரர் பதவியை துறக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க எங்கள் மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எங்கள் மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் சுசந்த கொடித்துவக்கு,
நாடாளுமன்றத்தில் ரத்ன தேரரின் நடத்தை குறித்து கட்சி மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலதிற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்த போதும் அவர் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேபோலவே எரிபொருள் விலை உயர்வு சர்ச்சையை எடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சம்பந்தப்பட்ட, கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக ரத்ன தேரர் செயற்பட்டார் என்றும் சுசந்த கொடித்துவக்கு குறிப்பிட்டார்.
ஞானசார தேரரை நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் கட்சியைச் சேர்ந்த எவரும் தன்னை அழைக்கவில்லை என்றும் இது தொடர்பாக தனக்கு ஒரு கடிதமும் அனுப்பவில்லை என்றும் அதுரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.