தமிழகத்தில் பொலிசாரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிசார் தாக்கியதில் உயிரிழந்தவர் முருகேசன் என தெரியவந்துள்ளது. சேலம், ஆத்தூர், இடையப்பட்டி சோதனைச் சாவடியில் முருகேசனை பொலிஸார் லட்டியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கொரோனா காரணமாக சேலம் உட்பட 11 மாவட்டங்களில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் தனது நண்பர்கள் இருவருடன் கள்ளக்குறிச்சிக்கு சென்று மது அருந்தியுள்ளார்.
பின் முருகேசனும் நண்பர்களும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள சோதனை சாவடியில் பொலிசார் அவர்களை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
இதன்போது மது போதையிலிருந்து மருகேசனுக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்ற முருகேசனை பொலிசார் சரமாரியாக லட்டியால் தாக்கியுள்ளனர்.
முருகேசனை தாக்க வேண்டாம் என கெஞ்சிய உடனிருந்த நண்பர்கள், குறித்த சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
பொலிசார் தாக்கியதில் முருகேசன் சம்பவயிடத்திலேயே மயங்கியுள்ளார். இதனையடுத்து உடனடியாக மருகேசன் வாழப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருகேசன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
பொலிசார் தாக்கியதில் மருகேசன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொலிசார் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்நிலையில், நேற்று ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கப்பட்ட நாளில் மருகேசன் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.