பிரித்தானியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை தனிமைப்படுத்துமாறு, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுலாவை மீண்டும் துவங்கும் திட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், பிரித்தானியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை தனிமைப்படுத்துமாறு ஏஞ்சலா அனைந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிகம் காணப்படும் நாடுகளான பிரித்தானியா முதலான நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை மற்ற ஐரோப்பிய நாடுகளும் தன்மைப்படுத்தவேண்டும் என்று தான் விரும்புவதாக ஏஞ்சலா தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டைப் பொருத்தவரை, ஒருவர் பிரித்தானியாவிலிருந்து வருவார் என்றால், அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால், இந்த நிலை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இல்லை. ஆகவே, நான் அது நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று தனது நாடாளுமன்ற உரையின்போது தெரிவித்தார் ஏஞ்சலா, ஜேர்மனி, பிரித்தானியாவிலிருந்து வருபவர்கள் ஜேர்மன் குடிமக்களாகவோ அல்லது வாழிட உரிமம் கொண்டவர்களாகவோ இருந்தாலோ, அல்லது குடும்ப உறவினர்களின் மரணம் போன்ற மனிதநேய அடிப்படையிலான காரணங்களுக்காக வருபவர்களாகவோ இருந்தாலன்றி மற்றபடி ஜேர்மனிக்கு வர தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்படுவோர் முன்பதிவு செய்து, அனுமதி பெற்ற பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
அத்துடன், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தாலும், அவர்கள் இரண்டு வாரங்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுதான் ஆகவேண்டுமென்பதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகள் பிரித்தானியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.