பழைய கதைகளையே கூறிக் கொண்டிருக்காமல் சீன இராணுவத்தின் உடையை ஒத்த உடையணிந்த நபர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்துவதாகக் கூறி பழைய கதைகளையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் கம்புறுபிபட்டி நகர பஸ் தரப்பிடத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதாகவும் “ஒரே நாடு ஒரே சட்டம்” காணப்படுவது என்று கூறினாலும், நான் தான் நன்றாக செய்தேன் என்று மாத்திரம் கூறவேண்டாம்.
அதே போன்று ட்ரோனர் கமரா மூலம் இலங்கையை இந்தியா கண்காணிப்பதைப்பற்றிக் கூறுங்கள். தேசிய பாதுகாப்பு என்று வசனங்களால் மாத்திரம் கூறுவது போதுமானதல்ல. அதிகாரம் உடையவர்களுக்கும் அதிகாரம் அற்ற சாதாரண மக்களுக்கும் வெவ்வேறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை அனைவரும் அறிவார்கள்.
எனவே, முடியுமானால் இந்த வைரஸ் பரவலை எப்போது கட்டுப்படுத்துவீர்கள்? என்று கூறுங்கள். அவ்வாறில்லை என்றால் நாட்டை நிர்வகிக்கக் கூடியவர்களிடம் ஒப்படைத்து செல்வதாகக் கூறுங்கள். அதே போன்று விவசாயிகளுக்கு உரத்தை எப்போது வழங்குவீர்கள் என்றும் கூறுங்கள்.
இவற்றை அறிந்துகொள்ள மக்கள் விரும்புகின்றனர். தற்போது எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. அதனை குறைப்பீர்களா? இல்லையா? எப்போது எரிபொருள் விலையைக் குறைப்பீர்கள் என்று அறிவியுங்கள்? இதனையும் அரசியல் வேலைத்திட்டமாக்க முயற்சிக்க வேண்டாம்.
இதேபோன்று இணையவழி கல்வியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான நிவாரணத்தை எவ்வாறு வழங்கப்போகிறீர்கள்? என்று கேள்வியெழுப்புகின்றோம். எவ்வாறிருப்பினும் மீண்டும் மீண்டும் உங்களின் போலியான வாக்குறுகிகளை நம்பி ஏமாறுவதற்கு மக்கள் தயாராக இல்லை.
73 வருடங்களாக வெவ்வேறு முகங்களில் ஒரே பொய்களையே கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்துகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.