ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுப்பாரெனவும், அதற்கான அதிகாரம் அவருக்கே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பசில் ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து இன்று கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இது உள்ளகத் தீர்மானம் குறித்த விடயம். தீர்மானத்தை எடுத்த பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட முடியும். அனுமானங்களை வைத்து பதிலளிக்க முடியாது. செய்திகள் வெளியாகிய விடயத்தை அடிப்படையாகக் கொண்டு கருத்து வெளியிட முடியாது. இது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். அமைச்சரவையை தீர்மானிக்கும் ஜனாதிபதியே அதனை மறுசீரமைப்பது குறித்து தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்படும் போது, சரியான நேரத்தில் எமக்கு தெரிவிக்கப்படும். எனினும் அனுமானங்களை வைத்து செயற்பட முடியாது எனத் தெரிவித்தார்.