ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, குறிப்பிட்டுள்ளார். கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொதுமன்னிப்பு வழங்கியுள்ள விடயத்திற்கு சர்வதேச ரீதியாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து இன்றையதினம் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய இடம்பெற்றது. அரசியலமைப்பில் காணப்படும் ஏற்பாடுகளுக்கு அமையவே ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார். அமெரிக்காவின் முன்னைய அரசாங்கமும் பலருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளது. இவ்வாறு இலங்கையில் வழங்கப்பட்ட மன்னிப்பை கேள்விக்குட்படுத்துவது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை வெளிக்காட்டுகிறது. உலகளாவிய ரீதியில் இது இவ்வாறுதான் இடம்பெறுகிறது. அரசியல் அமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவே இது இடம்பெற்றது.