இந்தியாவை ஸ்ரீலங்காவின் ஒத்துழைப்புடன் சண்டைக்கு இழுக்கும்  சீன அரசு – சிவஞானம் சிறீதரன்

இந்தியாவை ஸ்ரீலங்காவின் ஒத்துழைப்புடன் சண்டைக்கு இழுக்கும் சீன அரசு – சிவஞானம் சிறீதரன்

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது அதற்கு ஸ்ரீலங்கா முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றது என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சீனாவின் கடல் அட்டை பண்ணையை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அண்மைய நாட்களிலே சர்வதேச ரீதியாக பேசப்படும் ஓர் விடயமாக இலங்கையினுடைய தென் பகுதியிலே சீனாவின் அகலக் கால்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வடக்கு பகுதியில் குறிப்பாக நெடுந்தீவு அனலைதீவு நயினாதீவுகளில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ள நிலையில், தற்பொழுது யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடலட்டை குஞ்சுகளை வளர்ப்பதாக கூறி உருவாக்கப்பட்ட அட்டை பண்ணை, கிளிநொச்சியின் மூலை எல்லையில் கௌதாரிமுனை என்னும் இடத்தில் எந்த அனுமதியும் இன்றி அட்டை பண்ணையை செய்து வருகின்றார்கள்.

அத்துடன் யாழ் பாசையூர் மீனவர்கள் கிளிநொச்சி கௌதாரிமுனை மீனவர்கள் கடலட்டை வளர்ப்பிற்காக முன்வைத்த உரிமங்கள் மறுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது சீனர்கள் செய்து வருவதுடன் இயற்கையாகவே இக்கடலில் வளர்கின்ற கடல் அட்டைகளை நிராகரித்து செயற்கையாக பிரோய்லர் கோழிகளுக்கு வைக்கும் மருந்துகளை போல் கடலட்டைகளுக்கு வைத்து விரைவான வளர்ச்சியை அடைய வைத்து அதனை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் சீனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றினை சாதாரணமாகப் பார்க்கும்போது சீனாவிற்கு கடல் அட்டை ஏற்றுமதி இடமாகத்தான் தெரியும் ஆனால் இதன் பின் பாரிய அளவு அரசியல் செயற்பாடுகள் உள்ளன. சீனா தற்பொழுது கால்பதித்துள்ள இடங்கள் அனைத்தும் முக்கியமான கேத்திர நிலையங்களாகவே உள்ளன. இவ்வாறான விடயம் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரம் அல்லாது அண்மையில் உள்ள இந்தியாவிற்கு கூட ஓர் பாரிய அச்சுறுத்தலை வழங்குகின்ற செயற்பாடாக காணப்படுகின்றது.

அத்துடன் இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கின்ற மற்றும் இந்தியாவை கண்காணிக்கின்ற செயற்பாடுகளை துரிதமாக சீன அரசு மேற்கொண்டு வருகின்றது. அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பினை வழங்குகின்றது என குறிப்பிட்டார். அத்துடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குறித்த கடலட்டை பண்ணை தொடர்பாக சட்டரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *