சீனாவின் மேற்கு பாலைவன பகுதியில் அணு ஆயுத கிடங்குகள் இருப்பது தொடர்பில் அமெரிக்கா விசனம் வெளியிட்டுள்ளது. குறித்த பாலைவன பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணை கிடங்குகள் இருப்பதாக செய்மதி புகைப்படங்கள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் அண்மையில் செய்தி ஒன்றை வெளியிட்டது. சீனாவின் மேற்கு பாலைவன பகுதியில் ஏவுகணை கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டியதை சுட்டிக்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைசிடம் நிருபர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நெட் பிரைஸ் சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களை குவித்து வருவதை சில செய்திகளும் வேறு சில நடவடிக்கைகளும் காட்டுகின்றன. இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது’’ எனக் கூறினார்.