இலங்கையில் கொரோனா தொற்றை கண்டறியும் 5,00,000 பரிசோதனை கருவிகளை (Rapid Diagnose Test – RDTs) அமெரிக்கா வழங்கியுள்ளது.
இலங்கை மதிப்பில் 300 மில்லியன் ரூபாய் (1.5 மில்லியன் டொலர்) பெறுமதியான இப்பரிசோதனை கருவிகளை அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி கிளையான அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பினூடாக (USAID) இலங்கை சுகாதரா அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்மாதம் 6 ஆம் திகதி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய 15 இலட்சத்திற்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக இப்பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றை மிக விரைவாக கண்டறிவதை சாத்தியமாக்கவதன் மூலம், அமெரிக்க மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட இப்பரிசோதனைகள் இலங்கையில் உயிர்களை காப்பதுடன் பொதுச் சுகாதாரத்தினையும் பாதுகாக்க உதவும் என இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான USAID செயற்பணி இயக்குனர் ரீட் ஈஷ்லிமேன் தெரிவித்தார்.
இந்ந நன்கொடை இலங்கை அரசாங்கத்தின் பெருந்தொற்றுக்கான பதிலளிப்பிற்கு அமெரிக்கா வழங்கிய முந்தைய உதவிகளின் அடிப்படையில் அமைவதுடன் எமது உறுதியான, நீண்டகால பங்காண்மையினையும் பிரதிபலிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். பிறப்பொருளெதிரியாக்கியை கண்டறியும் (antigen-detecting) இந்த பரிசோதனை கருவி கொரோனா வைரஸின் இருப்பை நேரடியாக கண்டறியும். இப்பரிசோதனை மேற்கொள்வதற்கு எளிதானவையாக இருப்பதுடன் நேரடிப் பரிசோதனைகளுக்கான விரைவான பரவலாக்கப்பட்ட அனுகலை சாத்தியமாக்குகின்றன.
மேலதிக உபகரணங்களோ அல்லது விசேட ஆய்வுகூடங்களுக்கான தேவையோ இப்பரிசோதனைகளுக்கு இல்லாதிருத்தலானது அதிகளவான பரிசோதனைகளை மேற்கொள்ள உதவுகிறது. 8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான அவசர விநியோகங்கள் மற்றும் முக்கியமான சேவைகளையும் மேலதிமாக அதே மாதிரியான நன்கொடையாக 200 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிகளையும் நன்கொடையாக வழங்கி பொதுச் சுகாதாரத்ததைப் பாதுகாப்பதற்காக இப்பெருந்தொற்றின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா இலங்கையுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளது.
கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இலங்கை மக்களின் அவசரக் சுகாதார தெவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும், இப்பெருந்தொற்றின் எதிர்மறையான பொருளாாதாரத் தாக்கங்களைத் தணிப்பதற்காகவும், மற்றும் முடிவாக உயிர்களைக் காப்பதற்காகவும் இந்த உதவிகளானது இலங்கையின் 25 மாவட்டங்கள் மற்றும் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது.