ஈராக்கில் நிலைகொண்டுள்ள தமது நாட்டுப் படையினர் இவ்வாண்டு இறுதிக்குள் முழுமையாக மீளப் பெறப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
எனினும் ஈராக்கிய இராணுவத்தினருக்கான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை அமெரிக்க இராணுவத்தினர் தொடர்ந்தும் வழங்குவார்கள் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள ஈராக்கிய பிரதமர் முஸ்தபா அல் காஸிமிக்கும் ஜோ பைடனுக்கும் இடையில் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தப் பேச்சுக்களின் போது கருத்து வெளியிட்ட ஜோ பைடன், புதிய அத்தியாயத்திற்கு மாறுகின்ற போதிலும் இருதரப்பு பயங்கரவாத ஒத்துழைப்பு வழமை போன்று இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஈராக்கிய பிரதமர், முன்னெப்போதும் இல்லாத வகையில் இருதரப்பு உறவுகள் வலுவாக உள்ளதாகவும் பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, கலாசாரம் மற்றும் ஏனைய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு இருக்கும் எனவும் கூறியுள்ளார். அத்துடன் ஈராக்கில் இனி வெளிநாட்டுப் படையினரின் பிரசன்னம், அவசியமில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான படை நடவடிக்கையில் ஈராக்கிய படையினருக்கு உதவி வழங்கும் வகையில் 02 ஆயிரத்து 500 அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நிலைகொண்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அறிவிப்பு மூலம், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மற்றுமொரு படை நடவடிக்கையும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதியுடன் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டு படையினர் முழுமையாக வெளியேறவுள்ளதாகவும் ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.