கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவை மூடுமாறு அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் இன்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. இங்கு கொரோனா தொற்றுப் பரவலானது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய தாதியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களுள் தீவிர சிகிச்சை பிரிவில் நியமிக்கப்பட்ட 13 தாதியர்களில் எட்டு பேர் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒரு மாதத்துக்கு முன்பு 25 தாதியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் தொடர்ந்து வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும், பலமுறை புகார்கள் வந்த பின்னரும் இப்பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகள் தவறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவு சரியாக சுத்தம் செய்யப்படவில்லை. இங்கு முழு நேர கடமைகளைச் செய்ய சிரேஷ்ட ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே வருகிறார்கள்.
இது தொடர்பில் புகார் செய்துள்ளோம். சுகாதார சேவைகள் இது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தாதியர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து கடமைக்கு தாதியர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் மருத்துவர்கள் மற்றும் சிரேஷ்ட ஊழியர்கள் அடங்கிய ஒரு குழுவையாவது கடமைகளுக்கு நியமிக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.