இராணுவத்தின் 24 மணிநேர அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று காலை 8.30 மணிக்கு கொழும்பு, விகாரமாதேவி பூங்காவில் ஆரம்பிக்கபட்டுள்ளது.
இந் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை தொடரும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளன.
‘கொவெக்ஸ் திட்டத்தின் கிழ் ஜப்பானிலிருந்து நேற்று இறக்குமதி செய்யப்பட்ட 7 லட்சத்து 28 ஆயிரம் தடுப்பூசிகள் இரண்டாவது டோஸ் செலுத்தலுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
இரண்டாவது டோஸ் கொழும்பு – கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 62 நிலையங்களில் வழங்கப்படும். இதில் முக்கியமாக வைத்தியசாலைகள் / வைத்தியர் அலுவலர்கள் அலுவலகங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் ஆகியவை அடங்கும்.
மேல் மாகாணத்தில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், மீதமுள்ள அளவுகள் கேகாலை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளன.
ஏற்கனவே இலங்கையில் அஸ்ட்ராசெனிகாவை முதல் கட்ட தடுப்பூசியாகப் பெற்று இரண்டாம் தடுப்பூசிக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
அதற்கு அமைவாக தடுப்பூசி பெற வருபவர்கள் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை எடுத்துவர வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் அறுவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த மாத இறுதிக்குள் இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும், அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறினார்.