சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டிய அதேவேளை, இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் நாட்டின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஒழுங்கு விதிகளும் கடப்பாடுகளும் வரையறுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற இலங்கை கடற்றொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய சர்வதேச நியமங்களை மீள்திருத்தம் செய்வது தொடர்பான கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, ஜரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், பலநாள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இலங்கை கடற்றொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகளை மீள் திருத்துவது தொடர்பாகவும், ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற மீன்களில் சுமார் 60 வீதத்திற்கும் அதிகமான மீன்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் கொள்வனவு செய்யப்படுகின்றன.
அத்துடன், இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐரோப்பிய சந்தைகளில் இலங்கை மீன்களுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.