முல்லைத்தீவு உட்பட தமிழர் தாயக பூமியில் ஸ்ரீலங்கா அரச படையினர் பல்வேறு விவசாய பண்ணைகளை நடத்திவருவதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் விவசாய திணைக்களங்களை அரச ஊழியர்களைக் கொண்டு இயக்குவதுபோல ஏன் தமிழர் பிரதேசங்களில் இயக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா அரச படையினால் பல்வேறு விவசாய பண்ணைகள் நடத்திவருவது குறித்து ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று கேள்வி எழுப்பியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் சிவில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
குறிப்பாக கண்டி – குண்டசாலை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறான விவசாயப் பண்ணைகளை விவசாயத் திணைக்களமே நிர்வகித்து வருகின்ற நிலையில் ஏன் வடமாகாணத்தில் மாத்திரம் ஸ்ரீலங்கா படையினரை ஈடுபடுத்துகின்றீர்கள் எனவும் வினவினார்.