உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் திரிபடைந்து பரவிவரும் நிலையில், இலங்கையிலும் புதிய திரிபடைந்த வைரஸ் உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் 04 நாட்களாக 150 ற்கும் அதிகமானவர்கள் நாளாந்தம் உயிரிழந்துள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் திரிபடைந்த வைரஸ் உருவாகும் என வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் தற்போது பரவிவரும் வீரியம் கொண்ட டெல்டா திரிபை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், இலங்கைக்கே உரிய புதிய கொவிட் வைரஸ் திரிபொன்று உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்ரெம்பர் முதல் காலப் பகுதியில் இலங்கைக்குள் புதிய திரிபொன்று உருவாகும் அபாயம் காணப்படுவதாக ஔடதம் மற்றும் ஔடதம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் வைத்தியர் சஞ்ஜய பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் இலங்கைக்குள் புதிய வைரஸ் திரிபு உருவாவதற்கான சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்னவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு உருவாகும் வைரஸ், தற்போதுள்ள வைரஸை விடவும் வீரியம் கொண்டதாக அமையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிக்றன.
இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டு இரண்டு வாரங்களுக்கு பின்னர் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக அவர்களுக்கு இருந்த நோய்கள் காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எவ்வாறிருப்பினும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு இரண்டு வாரங்களின் பின்னரே தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு செயற்றிறன் அதிகரிக்குமென அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரையில், 21 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 2 ஆயிரத்து 800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.