ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் தலிபான்களின் செயற்பாடு மற்றும் அந்த நாடு பற்றிய தமது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவிக்கின்றது.
ஆப்கானிஸ்தான் மக்களின் தற்போதைய நிலைமை குறித்து கவலையடைவதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற வாராந்த ஊடக சந்திப்பில் வைத்து ஆப்கானிஸ்தானில் நிலவியுள்ள சூழ்நிலை பற்றி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் வினவினர்.
இதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப்பெரும,
சார்க் வலய நட்பு நாடு என்ற ரீதியில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி கவலையடைவதாக குறிப்பிட்டார்.
எனினும் ஸ்ரீலங்கா அமைச்சவைக் கூட்டம் நேற்று நடைபெற்றபோது ஆப்கான் விடயம் குறித்து கலந்துரையாப்படவில்லை என்றும் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் நிலைமை பற்றி இராஜாங்க மட்டத்திலான நிலைப்பாட்டை தெரிவிக்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.