தற்போதைய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கு காரணமாக முதலிடத்திலிருந்த தடுப்பூசியேற்றல் பணிகள் இன்று வீழ்ச்சி நிலையை அடைந்திருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார்.
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு இன்று படுமோசமான நிலையை சந்தித்திருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டை முழுமையாக முடக்காவிட்டால் 30 ஆயிரம் வரையான கொவிட் மரணங்கள் இடம்பெறலாம் என்றும், முடக்கப்பட்டால் 18 ஆயிரம் மரணங்கள் வரை குறைத்துக் கொள்ளலாம் என்றும் இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஆட்சியிலுள்ளவர்களுக்கு மனிதர்களின் உயிர்மதிப்பு பற்றிய உணர்வே இல்லை. இரவில் ஊடங்களுக்கு முன்பாக வந்துவிட்டு தடுப்பூசி வெற்றிகரமாக அளிக்கப்பட்டு வருவதாக மார்தட்டிக் கொள்கின்றார்கள்.
எனினும் இன்றைய நிலைமையை தடுப்பூசி அளிப்பதால் உடனடியாக மாற்றியமைக்க முடியாது. விசேடமாக இன்று அதிகமானவர்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி அளிக்கப்படுகின்ற நிலையில் அந்த தடுப்பூசியின் முதல் டோஸினால் எந்த வகையிலும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்காது. இரண்டாவது டோஸ் பெறுவது கட்டாயமாகும்.
தடுப்பூசி அளிக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் முன்கூட்டியே தெரிவித்தோம். விமான நிலையங்களை மூடும்படி முன்கூட்டியே தெரிவித்தோம். ஆனால் இறுதிவரை அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை.
இன்று ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் அதனால் வீழ்ந்துள்ளது. தடுப்பூசி அளிப்பதில் ஸ்ரீலங்கா முதலிடத்தை வகித்துவந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற ஆட்சியினால் தடுப்பூசியளிப்பதிலும் நாங்கள் பின்னடைவை சந்தித்திருக்கின்றோம் என்றார்.